வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.

4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

5. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.

6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.

இவை மட்டுமல்லாமல் வாழைப்பழத் தோல், உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்களை விரட்டமுடியும் என்றும் சருமத்தில் உண்டாகும் மருக்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்றும், கால் புதையணி (Shoe) பளபளப்பாக்கப் பயன்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.

குறட்டை (Snore) – இருக்கா!! என்ன செய்வது?

குறட்டையை தடுக்க வழிகள்

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

நார்ச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.

சரித்திரம்: இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர். அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.

வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.

1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.

2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் ‘ஏ’ இதில் அதிகம்.

இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.

தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல்: சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.
உணவுச்சத்து: அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.

சமையல் வகைகள்:
சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் ‘ஏ’ சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.

பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers