ஆறு சுவைகள் (six tastes)

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை “யாக்கை” என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு – இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு – தசையை வளர்க்கின்றது
புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று சொல்வார்கள்.

துவர்ப்புச் சுவை (Astringent)


இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

இனிப்புச் சுவை (Sweet)

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour)

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent)

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter)

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt)

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!For mo

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா

கொய்யாக்  கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும்.  இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு.

இதன் கிளைகள்  வழுவழுவென்று காணப்படும்.  இலைகள் தடித்து காணப்படும்.  கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.

கொய்யா, முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும்.  மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது..

கொய்யாப்பழம் கோடைக்காலங்களில்தான் அபரிமிதமாக விளையும்.  தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

கொய்யாவில் பலவகைகள் உள்ளன.  இதன் பழங்கள் சிலவகை  தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.

தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒருசில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும்.  இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.

கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும்.  இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.  குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.

மருத்துவப் பயன்கள்

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம்.  அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும்.  மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று.  நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.  குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆற

இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது.  இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.

கல்லீரல் பலப்பட

உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும்.  இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.  இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய் படுத்தும்.  ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.

இரத்தச்சோகை மாற

இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது.  இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும்.   இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.

இதயப் படபடப்பு நீங்க

ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும்.  உடலில் வியர்வை அதிகம் தோன்றும்.  இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம்.  இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது.  இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது.  குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும்.  பற்கள் பலமடையும்.  நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

* குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்

* சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.

* நரம்புகளைப் பலப்படுத்தும்.  உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்க

அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.  தினமும் இரண்டு கொய்யாப்பழம்  உண்டு வந்தால்   அஈஃ எனப்படும் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
நன்றி:ஹெல்த் சாய்ஸ்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers