YouTube புதிய சேனல் – for SCHOOLS

காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்! முன்னெல்லாம், நாம் படிக்கும் காலங்களில், ஆசிரியர்கள், ஏதேனும் கதை அல்லது கட்டுரைகள் எழுதி வர பணிப்பார்கள். நாமும் மெனக்கெட்டு  நூலகம் சென்றோ அல்லது அறிவு சற்று கூடிய பெரிசுகளிடமோ போய் விபரத்தை சொல்லி குறிப்பெடுத்து நம் கட்டுரைகளை வகுப்பில் சமர்ப்பிப்போம்.

ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் இவையெல்லாம்  தொலைந்து …. ‘ஒரு விஷயம் தெரியலையா?’ … ‘கூகிள் போ! …. அங்கு எல்லாம் கிடைக்கும்!!’  என்று சொல்லுமளவுக்கு ஆகி விட்டது. இணையத்தில் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் கலந்தே தான் உள்ளது.  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான  கல்வி சம்பந்தப்பட்ட  வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதினால் குறிப்பிட்ட அந்த கல்விக்கானதை   எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.  Google – தனது YouTube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பது பற்றிதான் இப்பதிவு. 

Youtube for Schools என்ற இப் பிரிவின் கீழ்  பள்ளி மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட  வீடியோக்களை பார்த்து பயன்பெறலாம். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கி,  தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். YouTube -இல்  ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொண்டு, இவற்றின் மூலம் மொழிகள், கணிதம், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்ற பலவற்றை மாணவர்கள் கற்று பயன்பெறலாம்.

பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள்,  YouTube -இல் உள்ள,  எந்த வீடியோவினையும் பார்க்க இயலும். ஆனால், மாணவர்கள்  Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களையும், தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே கருத்துரையும் வராது; Related Videos என்பதும் வராது. எப்படித் தேடினாலும் பாடங்கள் குறித்த வீடியோக்கள் மட்டுமே வரும். இந்த சிறப்பம்சம் மாணவர்கள் மற்ற ஏதேனும் வீடியோக்களைப் பார்க்க தடுப்பதோடு அவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமலும் இருக்க உதவுகிறது.

பள்ளி ஆசிரியர்களுக்காகவே Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் பல பள்ளிகளில் பணிபுரியும் சகஆசிரியர்களின் பாட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளதால், (மற்ற) பள்ளி ஆசிரியர்களும் இவற்றைப் பார்த்து தமது அறிவையும் மேம்படுத்திக்கொள்ளலாம் .

மேலும், குறிப்பிட்ட பள்ளியில் தரவேற்றப்பட்டு இருக்கின்ற வீடியோக்களை, அந்த பள்ளி மட்டுமே பார்க்கும்படியாகயும் அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் வளர்க்கும் YouTube -இன் இச்சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றே!

http://www.youtube.com/schools

http://www.youtube.com/education

http://youtube.com/teachers

சுலபமாக ஆங்கிலம் கற்க உதவும் பயனுள்ள தளம்!!

ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் பயம் தான். இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் classbites தளமும் ஒன்று.இதில் என்ன சிறப்பு என்னவென்றால் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்றுக் கொள்ள classbites வழி செய்வது தான்.

பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லிக் கொடுத்தாலும் கூட சிக்கல் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு தான் classbites வீடியோ வடிவிலான குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது. கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.

குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல். அதிக நேரம் தேவைப்படாமல் குறுகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்தப் பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. Classbites தளத்தில் காணக் கூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓடக் கூடியவை.

குறுங்கல்வி(Micro learning) என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வார்த்தை உச்சரிப்பு, இலக்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்போது விருப்பமோ அப்போது படித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும். இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடங்கள் தேவை என்று பரிந்துறைப்பதற்காகத் தான்.

ஒரு விதத்தில் classbites தளம் இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும். சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

பாடங்களை படிக்கத் துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளவும் சுவையான வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள். இந்த தளத்தின் முகவரி http://classbites.com/

மறந்து போன இணையதளங்களை தேடுவதற்கு

“அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே” என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்புவார்கள். எவ்வளவு முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.

இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே bookmarking சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடித் தடுமாறாமல் இருக்க bookmarking தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் bookmarking செய்யப்பட்ட தளங்கள் சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இதனைத் தவிர்க்கும் வகையில் புதியதொரு bookmarking வசதி அறிமுகமாகியுள்ளது. உண்மையிலேயே புதுமையான bookmarking சேவை தான் இது. காரணம் recall என்னும் அந்த வசதியில் bookmarking செய்யாமலேயே bookmarking வசதியை பயன்படுத்தலாம். அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம். அதெப்படி bookmarking செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் recall இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜய‌ம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.

கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள recall ஒருமுறை பொருத்திக் கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரைப் போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்துக்கொள்ளும். வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்க‌ள் அனைத்தையும் சேமித்துக் கொள்கிற‌து. பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணைய‌தளத்தை தேடிக் கண்டுபிடித்து தருகிறது. தேடியந்திரத்தில் தேடுவது போலவே நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்ப‌டுத்தி தேடிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இணையதள முகவரி http://www.recawl.com/

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers